ரத்தத்தில் இரும்புச்சத்தை புதுப்பிக்கும் புரதம்
ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தைப் புதுப்பிப்பதில் முக்கியப் பங்காற்றும புரதத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ரத்தசோகை நோய்க்கு புதிய தீர்வு கிடைத்துள்ளது. வாஷிங்டன்னில் உள்ள ஹார்வார்டு எம்.ஐ.டி நிறுவனத்தின் உடல்நல அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் முதன்மை ஆய்வாளர் ஜெனே ஜெனே சென் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், ரத்தத்தில் உள்ள செல்கள் இறக்கும்போது அவற்றில் உள்ள இரும்புச் சத்தை மீட்டெடுக்கும் புரதத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால், ரத்தசோகையை உருவாக்கும் பீட்டா தலசேமியா போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்குவழங்கப்படும் சிகிச்சையில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென் குழுவினர் நடத்திய ஆய்வில், HRI (hemi - regulated eukaryotic translational initiation factor 2) என்ற புரதத்தை கண்டறிந்தனர். இரும்புச்சத்து நிறைந்த ஹீமோகுளாபினின் நிலையற்ற சமநிலையை குறைக்கும் இந்தப் புரதம் ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் மறைந்திருந்தது. தொடர்ந்து நடத்திய ஆய்வில், உடலில் நடைபெறும் இரும்புச்சத்து மறுசுழற்சியிலும் HRI முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரியவந்தது. ஆனால் உடலில் HRI புரதம் குறைவாகவே உள்ளது. எனவே புதிய சிவப்பு அணுக்கள் உருவாக குறைவான இரும்புச்சத்துதான் கிடைக்கிறது. இரும்புச்சத்து மறுசுழற்சி நிகழ்வில் இரண்டு இடங்களில் HRI முக்கியப் பங்கு வகிக்கிறது. முதலில் HRI குறைவதால் மற்றொரு புரதமான ஹெப்சிடினின் அளவும் குறைகிறது. இரும்புச்சத்து மறுசுழற்சியில் முக்கியமான ஒழுங்கமைப்புப் பொருளாக ஹெப்சிடின் பணியாற்றுகிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இரும்புச்சத்து வெளியில் வந்தவுடன் ஹீமோகுளோபினின் செயல்பாட்டைத் தொடங்க உதவுகிறது. ஹெப்சிடின் இல்லாவிட்டால். உடலால் இரும்புச்சத்தை மீட்டெடுக்க முடியும், ஆனால் அதை இயங்கவைக்க முடியாது. மேலும், ரத்தத்தின் சிவப்பு அணுக்களின் மீது மேக்ரோஃபேஜஸ் என்ற உயிர்ப்பொருள் செயல்படும் தன்மையை HRI கட்டுப்படுத்துகிறது. இந்த மேக்ரோஃபேஜஸ் இறந்த சிவப்பு அணுக்களை அணுகி, அவற்றைத் தின்று ஜீரணித்து, அதில் உள்ள இரும்புச்சத்தை வெளியேற்றுகிறது. இந்த இரும்புச்சத்து மீண்டும் ரத்தத்தில் கலந்து செயல்படத் தொடங்குகிறது. மேக்ரோஃபேஜ்களை HRI கட்டுப்படுத்துவதால், இறந்த சிவப்பணுக்கள் ஜீரணிக்கப்படாமல் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடுகிறது. எனவே உடலில் இரும்புச்சத்து தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே உடலின் செயல்பாடு, இரும்புச்சத்து மறுசுழற்சி ஆகிய இரண்டு தளங்களிலும் HRI யின் செயல்பாடு மிக முக்கியமானது. எனவே HRI புரதத்தைத் தூண்டும் மூலக்கூறுகளின் தன்மையை ஆய்வு செய்துவருவதாக சென் தெரிவித்துள்ளார். இதன்மூலம், ரத்தசோகை நோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். ஏனெனில் புற்றுநோய், மன அழுத்தம், மூப்பு ஆகியவற்றில் இந்நோய் முக்கியப் பங்குவகிக்கிறது என்றும் சென் கூறியுள்ளார்.
Wednesday, February 20, 2008
Subscribe to:
Posts (Atom)